Sunday, June 27, 2010

கண்ணாடிச் சில்லுகள்


மௌனங்களுக்கூடாக
சிந்திக்கிடந்த வார்த்தைகள்
வெப்பம் தாளாமல்
சூடேறுகின்றன.

மெலிதாக கைவிரல்கள்
நடுங்கியவன்னம்
தொலைபேசியின்
மறுமுனையிலிருந்து
பேசிக் கொண்டிருந்தேன்
நான்.

பயணத்தில் எங்கோ
தொலைக்கப்பட்ட
பையில்
நமது கடைசி
சந்திப்பின்போது
பரிமாறிய அன்பு
நொறுங்கிக் கிடக்கிறது
பிரிக்கப்படாத பிஸ்கட்டென.

சில நிமிட
நல விசாரிப்புகளுக்குப் பிறகு
மீண்டும் இடமாறிக்கொள்கிறோம்
நாம்.

இன்று
எனது கனவில்
மழைத்துளிகள்
விழுந்து நொறுங்கி
பாதையெங்கும்
பரவிக்கிடக்கின்றன
கண்ணாடிச் சில்லுகள்.

Thursday, June 3, 2010

பிறந்தநாள் ஒலிபெருக்கி


இன்று காலையில்
உனது புகழ் பாடத்தொடங்கிய
போஸ்ட்டு மர
ஒலிபெருக்கியிலிருந்து
பீய்ச்சியடிக்கிறது...
பீரங்கிகளால்
தலை சிதறடிக்கப்பட்ட
எங்களது குழந்தைகளின்
இரத்தமும்
மரண ஓலத்திற்குப் பின்னான
அமைதியும்.

Wednesday, June 2, 2010

நானற்ற எனது இருக்கை


நானற்ற
எனது இருக்கையின்
வெளி நிரம்பிக் கிடக்கிறது
எனது சொற்களால்.

எனது காபி நிற பாட்டிலில்
எஞ்சியிருந்த
நீர் வற்றிப்போகிறது
சாலையோரக் குளமென.

நான் நடந்து சென்ற
பாதைகளிலிருந்து
எனது அடிச் சுவடுகள்
சாரை சாரையாக
ஊர்ந்து செல்கின்றன
புற்று நோக்கி.

எனது ரேகை பதிந்த
விசைப் பலகையின்
விசைகள் யாவும்
வழிதவறி ஊர்மாறி
மொழியற்றுப் போகின்றன.

எனது முகத்தை
கண்ணாடியென
பிரதிபலித்த கணினியின்
நினைவழிந்து போகிறது
தொலைதூரத்தில்
தன்னை இழக்கும் பாடலென.

இக்கனத்தில்
நான் நிறைந்து கொண்டிருக்கிறேன்

உனது வெளியில்
சொற்களெனவும்
நீர் எனவும்
மொழி எனவும்
பாடல் எனவும்
நீ எனவும்....

குறிப்பு : 07 - 06 - 2010 உயிரோசை மின்னிதழில் வெளியான கவிதை