
நானற்ற
எனது இருக்கையின்
வெளி நிரம்பிக் கிடக்கிறது
எனது சொற்களால்.
எனது காபி நிற பாட்டிலில்
எஞ்சியிருந்த
நீர் வற்றிப்போகிறது
சாலையோரக் குளமென.
நான் நடந்து சென்ற
பாதைகளிலிருந்து
எனது அடிச் சுவடுகள்
சாரை சாரையாக
ஊர்ந்து செல்கின்றன
புற்று நோக்கி.
எனது ரேகை பதிந்த
விசைப் பலகையின்
விசைகள் யாவும்
வழிதவறி ஊர்மாறி
மொழியற்றுப் போகின்றன.
எனது முகத்தை
கண்ணாடியென
பிரதிபலித்த கணினியின்
நினைவழிந்து போகிறது
தொலைதூரத்தில்
தன்னை இழக்கும் பாடலென.
இக்கனத்தில்
நான் நிறைந்து கொண்டிருக்கிறேன்
உனது வெளியில்
சொற்களெனவும்
நீர் எனவும்
மொழி எனவும்
பாடல் எனவும்
நீ எனவும்....
குறிப்பு : 07 - 06 - 2010 உயிரோசை மின்னிதழில் வெளியான கவிதை