Wednesday, May 26, 2010

ரசித்தவை - புகைந்தெரிந்து



புகைந்தெரிந்து
எரிசாம்பலானது
இன்னும் மின்னும்
அனல்
கனகனப்பு
காதலிலிருந்து

- அன்பழகனின் தொழுவு என்ற தொகுப்பிலிருந்து

Saturday, May 22, 2010

ஒரு மிடறு தேநீர்


வாகனங்களினிடையே சிக்கிய
இருள்
ஒரு மிடறு தேநீர்

அலுவலகத்திலேயே விட்டு வந்திருக்க வேண்டிய
அயர்ச்சி
ஒரு மிடறு தேநீர்

மகளுக்கு வாங்கித் தர நினைத்த பொம்மை
ஒரு மிடறு தேநீர்

அடுத்த சம்பளத் தேதி
ஒரு மிடறு தேநீர்

மனைவியுடன் காலையில் போட்ட
சண்டை
ஒரு மிடறு தேநீர்

போன மாதம் சென்று பார்த்திருக்க வேண்டிய
குட்டி மருமகள்
ஒரு மிடறு தேநீர்

ஊர்விட்டு ஊர்வந்து கிடைத்த
நட்புகள்
ஒரு மிடறு தேநீர்

இரவு நேரம் மனம் கரையப் பாடிய தோழரின்
குரல்
ஒரு மிடறு தேநீர்

காதலியின் நேரம் மறந்த தொலைபேசி
உரையாடல்கள்
ஒரு மிடறு தேநீர்

தோளில் சாய்ந்து அழுத தோழியின்
முகம்
ஒரு மிடறு தேநீர்

முதல் முதலாக மது அருந்த சொல்லிக் கொடுத்த
கல்லூரி சீனியர்
ஒரு மிடறு தேநீர்

கினற்றில் நீச்சல் பழகும் போது காலில் கோடு கிழித்த
கல்
ஒரு மிடறு தேநீர்

பார்வையாலேயே வகுப்பை அமைதியுறச் செய்யும்
ஒன்பதாம் வகுப்பு வாத்தியாரின் மீசை
ஒரு மிடறு தேநீர்

மிகவும் பிடித்த பால்ய வகுப்பின்
வசந்தா டீச்சர்
ஒரு மிடறு தேநீர்

சுடச் சுட அம்மா ஊட்டிய
நெய்ச் சோறு

காலியான கோப்பையிலேயே
தேங்கிவிடுகிறது கடைசி மிடறின் தித்திப்பு
நாளையும் தேநீர்கடைகளை நோக்கி
கால்கள் நகரும்படிக்கு

Wednesday, May 19, 2010

மழை


நேற்று
இப்படித்தான் இருந்தது.
இன்றும்
இப்படியேதான் இருக்கிறது.
நாளையும்
இப்படித்தான் இருக்கும் போல.
எது எப்படி இருந்தாலும்
மழை எப்பொழுதும் போல்
குளிர்வித்து விடுகிறது
மண்ணையும் மனதையும்.

படம் : http://www.flickr.com/photos/craigmdennis/ / CC BY 2.0