Monday, July 26, 2010

மியாவ்


எனது மகளுக்கு
மியாவ் என்றால்
ரொம்பப் பிரியம்.

மியாவிற்கும் அதுபோலவே.

அவள் செல்லும் இடங்களெல்லாம்
பின்னாலேயே சுற்றித் திரியும்.

அவளின் உலகத்தில்
அது பொம்மையாகவோ
அல்லது மிட்டாயாகவோ
இருந்திருக்கலாம்.

எனது மகளின்
விரல்களுக்கிடையில் அது
அவ்வப்போது மாட்டிக் கொள்வது
மழைநாட்களில் தான்.

மியாவ் அவளுக்கு
மழைபற்றிய ஆயிரம்
கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கும்.

எனது மகள்
பள்ளிக்குச் சென்றிருந்த
ஒரு மழைநாளில்
அடுப்பங்கரை சன்னலில்
வந்தமர்ந்த வெள்ளைநிற மியாவ்
இரத்தம் படிந்திருந்த
பற்களைக் காட்டிச்
சிரித்தபடி தாவிச் சென்றது
இராணியின் நாற்காலிக்கடியில்
நின்றிருந்த எலியைப் பிடிக்க

இப்போது மியாவ்
புஸ்ஸி கேட்டாகியிருந்தது.

Friday, July 16, 2010

கனவுகள்

கனவுகள் உருப்பெறத்
தொடங்கியிருந்தன.

மிகப் பெரும் மலையை
நகர்த்திப் போட்ட பின்
மிக ஆசுவாசமாக
நடந்து கொண்டிருந்தோம் நாம்.

உள்ளங்கையில் ஒட்டியிருந்த
வண்ணங்கள் வெளிறிப் போன
பட்டாம் பூச்சிகள் ஒவ்வொன்றாய்
பறக்கத் தொடங்கின.

எஞ்சியிருந்த பட்டாம்பூச்சிகளை
விரல் விட்டு
எண்ணிக்கொண்டிருந்தோம் நாம்.

கடைசியில் ...
எனது குழந்தை
எரிந்து போனது.

Monday, July 12, 2010

தூக்கணாங் குருவி


போரூர்
விருகம்பாக்கம்
வடபழனி
மயிலாப்பூர்
இராயப்பேட்டை
திருவல்லிக்கேனி
எக்மோர் ...
அமைந்தகரை
அன்னாநகர்
கோயம்பேடு ...

தூக்கணாங் குருவியென
கொத்திச் சேர்க்கிறோம்
வாழ்க்கையை.