
எனது மகளுக்கு
மியாவ் என்றால்
ரொம்பப் பிரியம்.
மியாவிற்கும் அதுபோலவே.
அவள் செல்லும் இடங்களெல்லாம்
பின்னாலேயே சுற்றித் திரியும்.
அவளின் உலகத்தில்
அது பொம்மையாகவோ
அல்லது மிட்டாயாகவோ
இருந்திருக்கலாம்.
எனது மகளின்
விரல்களுக்கிடையில் அது
அவ்வப்போது மாட்டிக் கொள்வது
மழைநாட்களில் தான்.
மியாவ் அவளுக்கு
மழைபற்றிய ஆயிரம்
கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கும்.
எனது மகள்
பள்ளிக்குச் சென்றிருந்த
ஒரு மழைநாளில்
அடுப்பங்கரை சன்னலில்
வந்தமர்ந்த வெள்ளைநிற மியாவ்
இரத்தம் படிந்திருந்த
பற்களைக் காட்டிச்
சிரித்தபடி தாவிச் சென்றது
இராணியின் நாற்காலிக்கடியில்
நின்றிருந்த எலியைப் பிடிக்க
இப்போது மியாவ்
புஸ்ஸி கேட்டாகியிருந்தது.